கடவுள் வாழ்த்து
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அறிய வான பொருளனைத்தும் தரும்பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமும்தே சமும்வகுத்துக் கருவி ஆதி விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும் விழுப்பொருளே யான்சொலும்விண் ணப்பங் கேளே - தாயுமானவர் |
குறிப்பு:
- தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
- இந்நூல் “தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.
- இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
- திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
- கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
- அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
- இவரின் மனைவி மட்டுவார்குழலி.
- திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் ஆசி பெற்றவர்.
- இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
- காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
சொற்பொருள்:
- ஆரமிர்தே – அரிய அமிழ்தே
- பூரணமாய் – முழுமையாய்
- புனிதம் – தூய்மை
- விழுப்பொருள் – மேலானப்பொருள்
இலக்கணக்குறிப்பு:
- பழச்சுவை – ஆறாம் வேற்றுமைத் தொகை
- தரும் பொருளே – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
- காலமும் தேசமும் – எண்ணும்மை
- உயிர்த்திரள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
- விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்
மொழி வாழ்த்து
வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக் கையி னாலுரை கால மிரிந்திடப் பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் - பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் |
குறிப்பு:
- பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர்.
- பெற்றோர் = நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்.
- இவர் ஒரு பன்மொழிப் புலவர்.
- கரந்தைத் தமிழ் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராகத் விளங்கினார்.
- தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தார்.
சொற்பொருள்:
- வையம் – உலகம்
- இரிந்திட – விலகிட
- பைய – மெல்ல
- தாள் – திருவடி
- ஐயை – தாய்
இலக்கணக்குறிப்பு:
- தொன்மக்கள் – பண்புத்தொகை
- உள்ளம் – ஆகுபெயர்
- உரைகாலம் – வினைத்தொகை
- ஐயைதாள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
- தாள் தலை – இரண்டாம் வேற்றுமைத்தொகை
நாட்டு வாழ்த்து
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை பெருகு மின்ப முடையை குறுநகை பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம் - பாரதியார் |
குறிப்புகள்:
- வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல்.
- தேசியக்கவி எனப் போற்றப்படும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882இல் பிறந்தார்.
- பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர்ச் சென்னையில் இருந்து வெளிவந்த “சுதேசமித்திரன்” இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- மேலும் “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும், “இந்தியா” என்ற வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
- இவர் கீதையை மொழிபெயர்த்தார்.
- 11.09.1921 அன்று மறைந்தார்.
சொற்பொருள்:
- திரு – செல்வம்
- மருவு – பொருந்திய
- செய் – வயல்
- மல்குதல் – நிறைதல்
- இருநிலம் – பெரிய பூவுலகு
இலக்கணக்குறிப்பு:
- மருவு செய் – வினைத்தொகை
- பெருகும் இன்பம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
- நற்பயன் – பண்புத்தொகை
புறநானூறு
நூல் குறிப்பு:
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர்.
- இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
பரணர்:
- இவர் வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர்.
- கபிலர் போல மிக்க புகழுடன் வாழ்ந்தவர்.
- கபிலபரணர் என்னும் தொடரால் இது விளங்கும்.
- இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.
பேகன்:
- பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.
- கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன்.
- மலைநாட்டை ஆண்டவன்.
- இவனது ஊர் நல்லூர்.
- இவனது குடி ஆவியர் குடி.
சொற்பொருள்:
- அறுகுளம் – நீர் வற்றிய குளம்.
- உகுத்தும் – பெய்தும்
- உவர்நிலம் – களர்நிலம்
- ஊட்டியும் – சாலப் பெய்தும்
- கடாஅயானை – மதக்களிறு
- மாரி – மழை
இலக்கணக்குறிப்பு:
- அறுகுளம், அகல்வயல் – வினைத்தொகை
- வரையா மரபு – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கடாஅ – இசைநிறை அளபெடை
அகநானூறு
நூல் குறிப்பு:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன.
- நூலில் உள்ள 3 பிரிவுகள் = களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
- களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடைபவலத்தில் 180 பாடல்களும், நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன.
- நூலின் அடிஎல்லை = 13 – 31
- இந்நூலினை “நெடுந்தொகை” என்றும் வழங்குவர்.
- 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
- 2,8 என வருவன = குறிஞ்சித்திணை பாடல்கள்
- 4,14 என வருவன = முல்லைதினைப் பாடல்கள்
- 6,16 என வருவன = மருதத்திணை பாடல்கள்
- 10,20 என வருவன = நெய்தல் திணை பாடல்கள்.
- நூலை தொகுத்தவர் = மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருதிரசன்மனார்
- நூலை தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
சொற்பொருள்:
- ஓங்குமலை – உயர்ந்த மலை
- சிலம்பு – மலைச்சாரல்
- வேங்கை பிடவு – மலைநிலத்தே வளரும் மரங்கள்
- உகிர் – நகம்
- உழுவை – ஆண்புலி
- கவலை – கிளைவழி
- சாஅய் – மெலிவுற்று
இலக்கணக்குறிப்பு:
- ஓங்குமலை – வினைத்தொகை
- அவிழாக் கோட்டுகிர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நிரம்பா நீளிடை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நீளிடை – வினைத்தொகை
- உண்ணா உயக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- சாஅய் – இசைநிறைஅளபெடை
- தொல்கவின் – பண்புத்தொகை
- பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்.